2004/11/24

பார்த்ததும் படித்ததும்

கடந்த வார இறுதியில் இரண்டு வித்தியாசமான படங்களைப் பார்த்தேன். சற்றே பழைய படங்கள் தான் என்றாலும் எழுத வேண்டும் என்று தூண்டிய படங்கள். ஒன்று Hero, சீன மொழியில் எடுக்கப்பட்ட படம், இன்னொன்று நம்ம ஊர் 7g-rainbow colony. இரு வேறு துருவங்களைப் போல் இரண்டையும் பிரிக்கலாம். முதல் படத்தில் மொத்தம் ஐந்து முக்கிய பாத்திரங்கள் மட்டுமே. மற்றவர் எல்லாம் ஒப்புக்கு வருகிறார்கள். 7G ல் அத்துனை தமிழ் பட கதாபாத்திரங்களும் (நெஞ்சு வலி அப்பா, உதவாக்கரை நண்பர்கள்...) ஆஜார். 7g, நம்ம தெருவில் பார்க்கும் ஒரு சாதரண மனிதனைப் பற்றியது என்று சொல்கிறார் செல்வராகவன். சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம், இல்லாவிட்டால் படத்தில் இருக்கும் ஆபாசத்தை நியாயப்படுத்துவது கடினம். உதவாக்கரைகள் எல்லாரும் அப்படித்தானே இருப்பார்கள் என்று நியாயப்படுத்துவது எளிது. கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் இருக்கும் சின்ன இழையில் வெற்றிகரமாக நடைபழகி இருப்பதாக ஒரு விமர்சனம் படித்தேன். என்ன இழையோ, என்ன நடையோ கருமம், ! யுவன் சங்கர் ராஜாவின் இசையைத் தவிர 7g-ல் வேறு ஒன்றும் இல்லை.

Hero இதற்க்கு நேர் மாறாய், சாத்தியமே இல்லாத சண்டைக் காட்சிகள் கொண்ட படம். வானத்தில் பறந்தபடி, நீரில் நின்றபடி, காற்றை கிழப்பி விட்டு என்று விதவிதமாய் சண்டை போட்டார்கள். இருந்தும் ரசிக்க முடிந்தது. கவிதை போல ஒளிப்பதிவு (Christopher Doyle), ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் மீண்டும் மீண்டும் காட்டும் போதும், போரடிக்காமல் பார்த்துக் கொண்டது, வில்லன் என்று யாரையும் சொல்லாமல் எல்லோரையும் நல்லவர்களாய் சித்தரித்தது என்று சில விஷயங்கள் பிடித்து இருந்தது. இறுதியில் வரும் சிறு தொய்வைப் பொறுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

எதார்த்தப் (!) பொறுக்கியை விட fantasy Hero தான் எனக்குப் பிடித்து இருந்தது. ஒரு சந்தேகம், Hero முதலில் வந்ததா, இல்லை அலைபாயுதே முதலில் வந்ததா ? "பச்சை நிறமே" பாடலும், Hero படமும் ஒரே color sense ல் இருப்பதாகப்பட்டது.

படித்தது - A case of Need, Michael Crichton. கட்டாயம் படிக்க வேண்டிய காவியம் எல்லாம் இல்லை. ஆரம்பித்த தோஷத்துக்கு படித்து முடித்தேன். சுமார் தான். சுமார் என்று தெரிந்தாலும் திட்டிக் கொண்டே புத்தகத்தை முடிக்கும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு !

Hero பார்க்கும் போது எனக்கு பின் சீட்டில் மொத்தப் படத்தையும் பேசிக் கொண்டே பார்த்த தமிழ் மக்கள் (3 பேர், இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண்), அவர்களை என்னருகே அமர்ந்து படம் பார்த்த அமெரிக்கர் திட்டி முணுமுணுத்தது, எல்லாம் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்.

நேரம் இருந்தால் BBC தமிழோசையில் பாட்டொன்று கேட்டேன் கேளுங்கள், ரசிக்கும்படி இருக்கிறது.

No comments: