தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால் மட்டும் போதாது, இந்த ஊரில் தீபாவளி எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பதிவும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதை எழுதுகிறேன்.
காலையில் எண்ணை தேய்த்து குளியல், இந்தியாவில் எல்லோருக்கும் தொலைபேசிவிட்டு ஒரு அவசர உணவு, (cereal தான், வேறு என்ன) என்று ஆரம்பித்தது தீபாவளி. எழுந்த உடன் போளி சாப்பிட இங்கு செய்து தர ஆட்கள் யாரும் இல்லை. மதியம் நண்பர்களோடு Taste of India வில் உணவு. எப்போதும் அதிகம் பேசாத அதன் குஜராத்தி உரிமையாளர், இன்று வாழ்த்து சொல்லி நன்றாக பேசினார். பார்க்கும் ஒவ்வொரு இந்திய முகத்துக்கும் வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தேன் நான். இந்தியாவில் கூட இவ்வளவு பேருக்கு வாழ்த்து சொல்லி இருப்பேனா என்பது சந்தேகமே.
மாலையில் எங்கள் பல்கலைகழகத்தின் இந்து மாணவர்கள் சங்கமும், இந்திய மாணவர்களின் சங்கமும் இணைந்து நடத்திய சிறப்பு நிகழ்ச்சி. இரண்டு சங்கங்கள் எதுக்கு என்று கேட்டால், இன்று வரை யாரும் பதில் சொல்லவில்லை. நான் பார்த்த வித்தியாசம், இந்திய மாணவர்கள் சங்கம் அங்கிருந்து இங்கு படிக்க வந்தவர்க்ளைக் கொண்டது. இந்து மாணவர்கள் சங்கம் இங்கே பிறந்த இந்திய இந்துக்களைக் கொண்டது. பல்கலைகழகத்திடம் இரண்டு சங்கமும் காசு பெற முடிவாதல் சில நேரங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கொண்டாட்டங்கள் நடத்த முடிகிறது என்று நினைக்கிறேன்.
இங்கே பிறந்து வளர்ந்தவர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி இது. என்னைப் போல் படிக்க வந்தவர்கள் பெரும்பாலும் பார்வையாளர்களே. அமெரிக்க தேசிய கீதத்தை உணர்ச்சி பொங்கப் பாடினார்கள். இந்திய தேசிய கீதம் kal ho na ho ஹிந்தி பட பாட்டு மெட்டில் மாற்றி அமைத்துப் பாடினார்கள். ரஹ்மான் இந்தியாவில் செய்ததை இவர்கள் இங்கே செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
மற்ற அனைத்தும் ரசிக்கும் படி செய்து இருந்தார்கள். பரத நாட்டியம், கதக், பாங்கரா, ராஸ் என்று அத்துனை நடனமும் இருந்தது. இங்கு குடியேறிய இந்தியப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து சமையல் செய்து கொண்டு வந்திருந்தார்கள். 500 பேருக்கு 10 பெண்கள் சமைப்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் சுவையாகவே செய்து இருந்தார்கள். சாப்பிட்டு விட்டு எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன்.
இந்தியா கூப்பிட்டு, என்ன செய்தாய் என்று என் தம்பியிடம் கேட்டேன். வீட்டுக்கு வந்தவர்களிடம் பேசிய நேரம் தவிர மற்ற நேரம் சன் டிவி பார்த்த கதை சொன்னான். அதிரசம், பாசிப்பருப்பு உருண்டை சாப்பிட்டானாம். நானும் ரவா கேசரி, ஜாங்கிரி, காரசெவ் சாப்பிட்டேன், போன வருடம் போல் சன் டிவி தான் பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு தூங்கப் போனேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment