2005/10/28

அமார்தேயா சென்னுடன் ஒரு சந்திப்பு

படிக்க வேண்டிய புத்தகங்கள் வரிசையில் முதல் சில இடங்களில் இருப்பது அமார்தேயா சென்னின் "The Argumentative Indian : Writings on Indian History, Culture and Identity". புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களை இந்த சந்திப்பில் பகிர்ந்து கொள்கிறார் சென். சில நல்ல கேள்விகள், அதற்கு அருமையான பதில்கள். கட்டாயம் கேட்க வேண்டிய உரையாடல்.

2005/10/13

ரசம், ரசம், ரசம் ...

ரசம் பற்றி கமலாஸ் ஒரு பதிவு எழுதப் போக, ரசப் பைத்தியம் என்று கிட்டத்தட்ட எல்லோராலும் கூப்பிடப்படும் அடியேன் அதை பற்றி எழுதாவிட்டால் எப்படி என்று உள்ளே Alter Ego ஒன்று திட்ட, இதோ நான் சாப்பிட்ட சில நல்ல ரசங்கள் ..

Super Star போல் எப்பொழுதும் நம்பர் 1 : அம்மா ரசம்.
கமல் போல் என்ன கரணம் அடித்தாலும் நம்பர் 2விலேயே (சந்தோஷமாய்) நிற்கும் : மனைவி ரசம்.

இதை தவிர சில ...
பெங்களூரில் : M.G Roadல் Brindavan (அடியேனைக் கண்டவுடன் 2 டம்ளரில் ரசம் வைத்து விடுவார் அங்கே வேலை செய்த நாமம் போட்ட அண்ணாச்சி), Amaravati, Residency road.
மதுரையில் : கணேஷ் மெஸ் ரசத்தை தோற்கடிக்க யாரவது புதிதாய் கடை திறந்தால் தான் உண்டு.
மும்பையில் : Madras canteen, matunga. சுமார் தான் என்றாலும், மும்பைக்கு அவ்வளவு தான் கிடைக்கும்.
Dallasல் : madras pavilion.
Gainesville, Fl : போட்டிக்கு ஆளே இல்லாததால் என் ரசம்.

இதை தவிர சில உவ்வே ரசங்கள் ..
TCE Hostel ரசம்.
சரவண பவன் ரசம். (?)
ரயிலில் வரும் ரசம்.
பெங்களூரில் சாந்தி சாகரில் தரும் ரசம்.

இந்த கடைசி நாலு ரசத்தையும் சாப்பிட்டு விட்டு தெனாலி ராமன் பூனை கணக்கா ரசமே பிடிக்காமல் போன ஜீவன்கள் உள்ளது. அதனால் ஜாக்கிரதை.

2005/10/09

இலையுதிர் காலம்

Atlanta வில் இலையுதிர் காலம் துவங்கி விட்டது. மரங்கள் இலையுதிர்த்தாலும் சிறு செடிகள் அழகாய் பூக்கும் மாதங்களும் இவைதான். நம்ம ஊர் செவ்வந்தி, chrysanthemum என்ற பெயரோடு இல்லாமல், garden mum என்ற புனைப் பெயரோடு அழைக்கப்படுகிறது. எங்கள் வீட்டு செவ்வந்தியும் பூக்க தொடங்கிவிட்டது.

2005/10/06

Finally found a lapdesk !


Well my search for a decent lapdesk for my latitude notebook ended with this nice one. I wanted it to sit comfortably in my lap (obviously) with some space for my mouse and notes, and I wanted it cheap. That is all that was needed. Still it wasn't easy to find one. Well my wife spotted this one in Linen & Things and here I am happily blogging. I will recommend this for any one. No specific company name or anything on it. They call it - lapdesk. thats it.

2005/07/31

திருப்பதி செல்ல எளிதாய் ஒரு வழி

நம்மில் பலருக்கும் திருப்பதி செல்வது என்றால் முதலில் நினைவுக்கு வருவது நீண்ட வரிசைகளும், ராமானந்த் சாகரின் ராமாயணம் ஓடும் கூண்டுகளும் தான். 10/15 மணி நேரம் இந்த கூண்டில் மாட்டிய அனுபவம் எங்கள் குடும்பத்திற்க்கு உண்டு. இப்பொழுது அதனை குறைக்க M.G.M மாதிரி கைப்பட்டை கொண்டு வந்தாலும், கூண்டில் இருக்கும் நேரம் தான் குறைந்து இருக்கிறது. மற்ற எல்லாம் அப்படியே தான். உ.ம் தேவஸ்தானம் தரும் பயணியர் விடுதி கூட்டம், வரிசை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது.

இந்த முறை , சென்னையில் இருக்கும் ஆந்திர சுற்றுலாத் துறையின் திருத்தல உலாவில் போனோம். சென்னையில் மாலை 6.30 க்கு கிளம்பி, A/c volvo பேருந்தில், கீழ் திருப்பதிக்கு 10.30 க்கு கொண்டு போய்விட்டார்கள். அங்கே நம் அறை சாவியோடு ஒரு ஆள் நிற்கிறார். (இருவருக்கு ஒரு அறை). காலை 3 மணிக்கு கிளம்பி மலை மேல் ஏறினால், போன உடன் ticket உடன் ஒரு ஆள் நிற்கிறார், நம் செருப்பு, cell phone வாங்க ஒரு ஆள் இருக்கிறார். அர்ச்சனா அனந்தர தரிசனத்திற்க்கு(200 ரூ) கூட்டி போகிறார்கள். 7 மணிக்கு தரிசனம் முடிந்து, லட்டு வாங்கி மீண்டும் கீழ் திருப்பதி நோக்கி பயணம். அதிக லட்டுக்கள் வேண்டுமானால் அதற்க்கும் ஏற்பாடு செய்கிறார்கள். மொட்டை அடிக்க வேண்டுமா அதற்கும் இந்த நேரத்திற்க்குள்ளே முடிக்க சரியாய் ஆட்கள் இருக்கிறார்கள். மாலைக்குள் கீழ் திருப்பதி அம்மனையும், காளஹஸ்தியும் பார்க்க அழைத்துச் சென்று 4 மணிக்கு சென்னைக்கே கூட்டி வந்து விட்டு விடுகிறார்கள்.

ஒரு நாளில் இவையனைத்தும், மிக நீண்ட வரிசைகளில் நிற்காமல், போய் வந்ததைப் பார்த்த பொழுது, அதற்காய் கொடுத்த 1000 ரூ உபயோகமாகவே பட்டது.

யாரேனும் போக நினைத்தால், இந்த ஆந்திர சுற்றுலாத் துறையின் அலுவலகம் தி.நகரில் பெருமாள் கோவில் அருகிலேயே இருக்கிறது. Swarnanthra travels என்று பெயர் போட்டு இருப்பார்கள்.

2005/07/29

சாலைகள்

The Hindu வின் தலையங்கத்தில் சாலைகள் பாதுகாப்பு பற்றி எழுதிவிட்டார்கள். தமிழகத்தில் இந்த முறை பார்த்த ஆச்சரியமான மாற்றம் இது. கோவை, பழனி, மதுரை இணைக்கும் சாலைகளில் 40/50 கி.மீக்கு ஒரு அவசர சிகிச்சை மையம், ambulance வசதியோடு பார்க்க முடிகிறது. பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்து முக்கியமானது, சாலைகளின் சீரான நிலை. (தேர்தல் வருவதால் கூட இருக்கலாம்.) 80 - 100 கி.மீ வேகத்தை எளிதாக தொட முடிந்தது. 120 ஐ தொட பார்த்த டிரைவரை அடக்கி வாசிக்க சொல்ல வேண்டி இருந்தது. வரவேற்க தக்க மாற்றம். தமிழகம் முழுதும் நிலை இப்படியா தெரியவில்லை.

தமிழக பொறியியல் கல்லூரிகள் - 3

இதை படிங்க முதல்ல. சிரிப்பு சிரிப்பா வரலை ? பாதி கல்லூரிகளில் பாடம் நடத்த நல்ல ஆள் இல்லை, இருக்கறவங்கள்ள பாதிக்கு பாடம் வேற தெரியாது, இதுல பசங்க என்ன போட்டுட்டு வரங்கன்னு பார்த்து, அது சரியா இல்லைனா fine போட்டு, வகுப்பை விட்டு வெளியே அனுப்பி, பாடத்தை தவிற எல்லாம் நடக்கும் போல இருக்கு. Moral Science பாடம் வைக்காமல் இருந்தால் சரி. Moral guardian வேலை கல்லூரிகளுக்கு எதற்கு என்று தெரியவில்லை. அப்பா, அம்மா பார்த்து கொள்ள மாட்டார்களா ? 18 வயதில் (விவரம் தெரிந்த) அப்பா அம்மாக்கள் எல்லோருமே பிள்ளைகளுக்கு விவரம் தெரியும் என்று விடும் போது நம் கல்லூரிகளுக்கு திடீர் என்று அக்கறை. நான் பார்த்த வரை இதனை Selling point ஆக உபயோகிக்கிறார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. இதை செய்ய 500 பக்க புத்தகத்தை படிக்க வேண்டாம். எனவே அமல் படுத்துவதும் சுலபம். எனவே செய்கிறார்கள்.

Shorts, T-shirt, jeans இவை எல்லாம் போட்டால் என்ன ? படிப்பு மண்டையில் ஏறாதா ? நான் படித்த போது வேஷ்டி கட்டி வருவது சகஜம். என்ன கெட்டுப் போய்விட்டோம் என்று தெரியவில்லை.

அப்படியே இதையும் படித்துவிடுங்கள். நான் இங்கே சொன்னதை மார்தட்டி பெருமையாய் சொல்கிறார்கள். கம்பனிக்கள் கேட்பதை சொல்லிக் கொடுக்கிறோம் என்று. Computer science, Computer engineering எல்லாம் தேவை இல்லை இவர்களுக்கு. science/engineering எல்லாம் சும்மா, programming போதும். தேவுடா ! தேவுடா !

2005/07/28

நான்கு மாதங்கள் கழித்து .....

வலை பதிவதை விட்டு 4 மாதங்கள் ஆகிவிட்டது. படிப்பில் வந்த திடீர் கவனம் என்றெல்லாம் கதை விட முடியாது. பதிய விஷயங்கள் பல இருந்தும் ஏனோ இணையத்தை விட்டே கொஞ்சம் விலகி இருந்து விட்டேன். இரண்டு மாத இந்திய பயணம் வர இருந்ததால், அதற்காக முடிக்க வேண்டிய வேலைகள், செமஸ்டர் இறுதி தேர்வுகள் என்று முதல் இரண்டு மாதம் ஓடியது. அடுத்த 2 மாதத்தில் அம்மா சாப்பாடு, அப்பாவோடு எப்பொழுதும் போல் நீண்ட உரையாடல்கள், இந்தியாவில் ஊர் சுற்றல், வீட்டில் முதல் திருமணம் என்பதால் எல்லோரும் வந்து இருந்து பார்த்து பார்த்து செய்து வைத்த திருமணம், அதனால் கிடைத்த அன்பு மனைவி, எல்லாம் நினைத்து, பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கும் போது ஜுலை 10 ஆகிவிட்டது. ஆசையாய் கட்டிக் கொடுத்த ரசப்பொடியை மறுக்க மனமில்லாமல் எடுத்து வைத்து, எல்லோருக்கும் கையசைத்து, ஒரு வாரம் பாரிஸ் என்று படு வேகமாய் போய்விட்டது. வந்து உட்கார்ந்து பார்த்தால் மறுபடி வேலை குவிந்து கிடக்கிறது. கிடப்பது கிடக்கட்டும் என்று மீண்டும் வலை பதிய ஆரம்பிக்கிறேன். எத்தனை நாள் தொடர முடிகிறது பார்க்கலாம்.

Paris ல் பிரமிக்க வைத்த இடங்கள் Louvre Museum, Musee d' Orsay, Eiffel Tower ல் july 14 நடந்த வாணவேடிக்கைகள். ஒவ்வொன்றைப் பற்றியும் தனியாக எழுதும் அளவுக்கு விஷயம் உள்ள இடங்கள். காண வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.

2005/04/05

தமிழக பொறியியல் கல்லூரிகள் - 2

நம் பொறியியல் கல்லூரிகளில் பாடம் தான் சொல்லிக் கொடுப்பதில்லை, படிக்க நினைக்கும் மாணவன் படிக்கும் அளவிற்க்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா ? அரசின் ஆதரவால் இயங்கும் autonomous கல்லூரியில் படித்தவன் நான். நான் படித்த 4 வருடமும் 30 மாணவர்கள் இருந்தால், 10 கணிணி இருக்கும். நான், என் நண்பன், இன்னும் ஒரு பெண் ஒரு கணிணிக்கு போட்டி போட வேண்டும். யார் வேலை செய்து இருப்பார்கள் என்று சொல்லவே வேண்டாம், எல்லோருக்கும் தெரியும். 6 வருட முன்னால் நிலை இது. இப்போது எப்படி என்று போய் தான் பார்க்க வேண்டும். ஆனால் அரசின் ஆதரவோடு இயங்கிய கல்லூரி இப்படி என்றால் சுயநிதி கல்லூரிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். திருமண மண்டபத்தில் விடுதி, ஒரே ஒரு 4 மாடி கட்டிடத்தில் மொத்த கல்லூரி (இது மதுரையில் இருந்தது), எந்த துறைக்கும் உருப்படியான ஆய்வங்கள் இல்லாமல் கல்லூரி நடத்துவது, என்ற அத்தனையும் உண்டு. ஏதாவது கேட்டால் ஆய்வகத்திற்க்கு தனியே ஒரு கட்டணம் போட்டு பேருக்கு ஒன்றை துவங்குவார்கள்.

நம் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் ? முதலில் பெற்றோர்கள். இவர்களை பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் குளருபடிகளுக்கு காரணமாய் சொல்ல முடியாது. இவர்களின் ஆர்வம் எல்லாம் தங்கள் பிள்ளைகள் எல்லாம் நன்றாக வர வேண்டும் என்பது தான். ஆனால் அந்த ஆர்வம் மேலிட சில சிறிய தவறுகளை செய்கின்றனர். ஒன்று எங்கு பொறியியல் படித்தாலும் பிள்ளை பெரிய ஆளாக வருவான் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் ஒரு கல்லூரியை பற்றி ஆராயமல் கொண்டு போய் சேர்ப்பது. வருடம் 32000 ரூபாய் போடுகிறார்கள், அது கூடவா செய்ய மாட்டார்கள் என்று கேட்பீர்கள். ஆனால் அது தான் உண்மை. உ-ம் என் சொந்த ஊரில் ஒரு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது. அதற்கான இடம் 2 சிறிய கட்டிடங்கள். அந்த கட்டிடத்தில் 4 வருட மாணவர்கள், 3 துறையினர், அத்துனைக்கும் ஆய்வகங்கள் எல்லாம் எங்கு இருந்தன என்பது புரியாத புதிர். (விடை : அவை எதுவும் இல்லை). தமிழகம் முழுதும் அண்ணா பல்கலைகழக பாடத்திட்டத்திற்க்கு மாறிய பொழுது, கல்லூரியில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒரு பாடத்திலாவது முட்டை வாங்கியதாக கேள்வி. ஒரு அப்பா மதிப்பெண் அவரே போய் பார்த்துவிட்டு வந்து சொன்னது "அட நம்ம பொண்ணு தான் படிக்கலைன்னு நினைச்சேன், மொத்த காலெஜும் அப்படி தான் இருக்கு". ஊர்க்காரர் ஒருத்தரைக் கேட்டால் போதும் அங்கே பிள்ளையை சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் அடுத்த வருடமும் அங்கே மாணவர்கள் சேர்ந்தார்கள். இது பொறியியல் மீது இருக்கும் மோகத்தால் தீர விசாரிக்காமல் பிள்ளைகளை கொண்டு போய் சேர்ப்பதால் வரும் பிரச்சினை.
ஆனால் இவர்களை முழுதாக குறை சொல்ல முடியாது. உண்மையில் ஒரு கல்லூரி பற்றி தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு தேவையான தகவல்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. சென்னையில் இருக்கும் ஒரு மாணவி, REC குருஷேத்ரா, சென்னையில் இருக்கும் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி, இரண்டிலும் கிடைத்தால் எதனை எடுக்கலாம். வட இந்திய வரை கூட போக வேண்டாம், கோயம்பத்தூர் கல்லூரி ஒன்றுக்கும், சென்னை கல்லூரி ஒன்றுக்கும் என்ன வித்தியாசம். இங்கு பஸ் கட்டணம், கட்டாய மதிய சாப்பாடு கல்லூரியில் என்று தண்டம் கொடுப்பதை, மாதம் விடுதிக்கு கொடுத்தால் நல்ல கல்லூரியில் படிக்க முடியுமா. இப்படி எல்லா தகவலும் தொகுத்து வைத்து இருக்கும் ஒரு இடம் இல்லை. அமெரிக்க கல்லூரிகளை U.S.News வரிசைப் படுத்துவது போல் நம் கல்லூரிகளை வரிசைப்படுத்தும் ஒரு நல்ல தரவரிசை இல்லை. இதை யாராவது செய்தால் பெற்றவர்களின் புண்ணியத்தைப் பெறுவார். ஒன்றரை லட்சம் கொடுக்கும் முன்னே 150 ரூபாய் புத்தகம் ஒன்று காசு போட்டு வாங்குவார்கள்.

பொறியியல் கல்லூரி மாணவர்களைப் பற்றி இன்னும் ஒரு பதிவு எழுத வேண்டும்.

2005/04/02

தமிழக பொறியியல் கல்லூரிகள்

10 வருடம் முன்னால் கிட்டதட்ட 15 பொறியியல் கல்லூரிகள் இருந்த இடத்தில் இன்று 200க்கும் மேற்பட்டவை இருக்கின்றது. இந்த அதிவேகமான வளர்ச்சி ஆரோக்கியமானதா, இப்படி காளான் போல் முளைத்த கல்லூரிகளின் நிலை என்ன என்பதை பற்றி எழுதத் தான் இந்த பதிவு. அமெரிக்கா வந்து இரண்டு வருடத்திற்க்கு மேல் ஆகி விட்டாலும் மற்ற நண்பர்களோடும், சில ஆசிரியர்களோடும், சில மாணவர்களோடும் பேசியதை வைத்தே இந்த பதிவு தொடர்கிறது. அதற்கும் மேலாக நம் ஊர் அரசியல்வாதிகள் மேல் நான் வைத்து இருக்கும் நம்பிக்கை இரண்டு வருடத்தில் எதுவும் மாறாது என்று சொல்கிறது. (நம்பிக்கை இல்லாதவர்கள் "சோ"வின் முகமது பின் துக்ளக் பார்க்கலாம். 25 வருடம் ஆகியும் எதுவும் மாறவில்லை.) சுயநிதி பொறியியற் கல்லூரிகள் நடத்துவது பெரும்பாலும் அரசியல்வாதிகள் என்பதால் தான் இந்த நம்பிக்கை.

முதலில் இந்த கல்லூரிகள் துவங்குபவர்களின் நோக்கம் என்ன. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை ஒளிமயமான இந்தியாவின் தூண்களை எழுப்புவது போல் எல்லாம் தெரியவில்லை. முதல் நோக்கம் அதனை ஒரு தொழிலாய் பார்ப்பதால் லாபம் சம்பாதிப்பது தான். ஆனால் எளிதாய் லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு இப்போது இது சுலபமான தொழில் அல்ல. 7-8 வருடம் முன்னால் அப்படி இருந்த போது கன்ஸ்யுமர்களான மாணவர்கள் மற்றும் காசைக் கொட்டும் பெற்றோர்கள் நிலை படு மோசமாகத்தான் இருந்தது. இப்போது demand (படிக்க வரும் மாணவர்கள்) குறைந்து, சப்ளை (காலி இடங்கள்), அதிகரித்து இருப்பதால் quality, infrastructure போன்ற மற்ற விஷயங்களில் கவனம் திரும்பி இருக்கிறது. இதனால் முன்பு இருந்தது போல் மோசமான நிலை இல்லை என்றாலும் சந்தோஷப்படும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை.

Anna University, REC போன்ற சில கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான மற்ற கல்லூரிகளுக்கு அடுத்து வருபவை பொருந்தும். முதலில் Quality of Education. இந்த கல்லூரிகளில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள். இதில் இரண்டு வகை. பல்கலைகழகத்தின் பாடத்திட்டத்தை சொல்லிக் கொடுப்பவர்கள், autonomus என்பதால் தங்கள் பாடத்திட்டத்தை தாங்களே உருவாக்குபவர்கள்.

முதல் வகை பெரும்பாலும் காளான் கல்லூரிகள். கட்டாயமாய் சொல்லி கொடுக்க வேண்டிய ஒரு பாடம் இருக்க, இருக்கும் ஆசிரியர்களை அதில் ஏதாவது ஒன்றை சொல்லி கொடுக்க வைக்கிறார்கள். இந்த ஆசிரியர் தேர்வு எப்படி நடக்கும் என்று நான் பார்த்த வரை புரிந்தது இது தான். அதிக நாள் வேலை பார்த்தவர்கள் அவர்கள் ஏற்கனவே சொல்லித் தந்த பாடத்தை எடுத்துக் கொள்வார்கள் (உ-ம் Algorithms, c programming ). புதிதாய் வந்தவர்கள் தலையில், புதிதாய் சேர்க்கப்பட்ட ஒரு பாடம் கட்டப்படும். (உ-ம் : Data Mining) . அவரும் மாணவர்களோடு சேர்ந்து படிக்கும் நிலையில் தான் இருப்பார். அப்படி ஒரு பாடம் எதற்காக சேர்க்கப்பட்டது, அதைப் படிப்பதால் என்ன பயன், ஒரு கத்திரிக்காயும் நடுத்துபவருக்கும் தெரியாது, படிக்கும் மாணவருக்கும் தெரியாது. மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கப்படும் பழைய பாடத்தின் நிலையும் சொல்லிக் கொள்வது போல் இருக்காது. வேகமாய் மாறும் Computer Science போன்ற பிரிவில் இல்லாவிட்டால் கூட, அடிப்படை மாறாமல் இருக்க Engineering இன்னும் கணக்கு போன்ற நிலைக்கு வரவில்லை. ஆனால் இந்த மாற்றம் நம் மூத்த ஆசிரியருக்கு பெரும்பாலும் எட்டி இருக்காது. புதிய மற்றும் பழைய ஆசிரியர்களுக்கு பிடிக்காத (இல்லை புரியாத) சில பாடங்கள் நடத்தாமல் விடப்படும் (உ-ம் Algorithmsல் - NP-Completeness) . Syllabus முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இங்கு கிடையாது. மாணவர்கள் தானாகவே பின்னர் படித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

Autonomous என்று சொல்லிக் கொள்ளும் கல்லூரிகளில் நிலை எப்படி இருக்கிறது. பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அவர்களே உருவாக்கியது என்றாலும் மற்றவர்களிடம் (Companies, AICTE committee..) காண்பிக்க வேண்டி இருப்பதால் இவர்களும் புதிய பாடங்களை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் எல்லா பாடங்களும் எடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை. புதிய பாடங்களை electives என்று சேர்த்துவிட்டு எல்லோருக்கும் காட்டலாம். ஆனால் இவை அனைத்தையும் நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. அவர்களுக்கு பிடித்ததை நடத்தினால் போதுமானது. அவற்றை நடத்துவதிலும் மேலே சொன்ன நிலை பொருந்தும். இத்தகைய கல்லூரிகளில் இன்னொரு முக்கிய பிரச்சினை தோன்றி இருக்கிறது. இங்கு பாடத்திட்டம் வகுப்பது ஒரு சிறிய குழு தான். படிக்கும் மாணவர்களில், வேலை வாங்கியவர் சதவீதம் கல்லூரியின் தரக் குறியீடாய் இருப்பதால், இந்த குழு MNC க்களை சந்தித்து பேசுகிறது. அவர்கள் சில பாடங்களை பரிந்துரைக்கிறார்கள். அது பாடத்திட்டம் ஆகிறது.

இதில் சில எழுதா ஒப்பந்தங்கள் (இந்த வருடம் கம்பெனிக்கள் 10 மாணவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்), சில எழுதிய ஒப்பந்தங்கள் (MOUs) உருவாகும். இது மாணவர்கள் நலனுக்காக என்று சொல்லப்படும். ஆனால் நடப்பது என்ன என்று கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரியும். உ-ம் இத்தகைய ஒப்பந்தங்களை போடும் IBM நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், பாடதிட்டத்தில் அவர்களது இஷ்ட பாடங்கள் சேர்க்கப்படும். அல்லது கல்லூரியே அவர்கள் certification பாடங்களை மாணவர்களுக்கு பரிந்துரைக்கும். இப்படி DB2 என்ற databaseம், websphere என்ற IBMன் serverம் படித்துவிட்டு மாணவர்கள் வெளியே வருகின்றனர். இது IBM போன்ற நிறுவனத்தின் தந்திரம். Developer base அதிகம் ஆவதால் அவர்கள் பல வருடம் நிலைத்து நிற்க செய்யும் உத்தி.

ஆனால் மாணவர்கள் இதனால் ஒரு software/computer எப்படி வேலை செய்யும் என்பதற்க்கு பதிலாய், IBM software/computer எப்படி வேலை செய்யும் என்று படிக்கிறார்கள் (அவற்றில் சிலவை 1970களில் வந்தது என்றாலும் கூட) . Aptech, NIIT போன்ற இடங்கள் செய்ததை இப்போது கல்லூரிகள் செய்கின்றன. அடிப்படைகள் தெரியாமல், வேலை செய்ய தேவையானதை மட்டும் கற்றுக் கொடுக்கின்றன. (அதனையும் மேலே சொன்னது போல் syllabus முடிக்காமல், என்ன சொல்லித் தருகிறோம் என்று புரியாமல் செய்வது இன்னும் பரிதாபம்)

இதனை படித்து வரும் மாணவர்கள் Computer/Software engineer என்றில்லாமல் software programmers ஆக வெளியே வருகிறார்கள். Computer scientist என்பது இந்த அஸ்திவாரத்தோடு எளிதாய் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. Switch போட்டால் light எரியும் என்று ஒரு electrical engineer சொன்னால் எவ்வளவு ஏமாற்றமாய் இருக்கும். அது போல் தான், இன்றைய computer engineerகள் வெளியே வருகிறார்கள். பாதி பேருக்கு, அவர்கள் தினம் வேலை செய்யும் Pentium க்கும், கல்லூரியில் படித்த 8085 க்கும் 6 வித்தியாசம் சொல்வது சிரமம். வருத்ததிற்க்குரிய விஷயம் electrical engineer களையும் அவசரமாய் computer programmers ஆக மாற்றி வருகின்றன நம் கல்லூரிகள். இது தான் Quality of Education.

இன்னும் கல்லூரிகளின் Infrastructure, மாணவர்கள் தரம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மனப்போக்கு, எல்லாம் வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

2005/04/01

Motorcycle Diaries (எர்னெஸ்டோ "ச்சே" குவாரா ...)

பல நண்பர்கள் இந்த படத்தை பரிந்துரைத்து இருந்தாலும் பார்க்க முடியாமல் தள்ளிப் போன படங்களில் இதுவும் ஒன்று. நேற்று இந்த படத்தை எங்கள் பல்கலைகழக தியேட்டரில் பார்க்க முடிந்தது. (இந்த குக்கிரமாத்தில் நல்ல படங்கள் ஓடாது என்பதால் வழக்கமான தியேட்டர்களில் வருவதில்லை). போகும் போது அரசியல் சாயம் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. அப்படி எதுவும் இல்லாமல், இரண்டு இளைஞர்கள் தென் அமெரிக்க கண்டம் முழுதும் எப்படி ஊர் சுற்றிப் பார்க்கிறார்கள் என்று சாதரணமாய் துவங்கி, உலகம் பற்றிய அவர்கள் பார்வை எப்படி மெதுவாய் மாறுகிறது என்று அழகாய் முடிகிறது.

அதற்கு மேல் அரசியல் இல்லை. எர்னெஸ்டோ, "ச்சே"வாய் மாற அந்த மோட்டர் சைக்கிள் பயணம் எவ்வாறு உதவியது என்பது மட்டுமே தான் படம். ஒரு தலைவானாய் பிற்காலத்தில் பிரபலமான ஒருவரைப் பற்றி துதி எல்லாம் பாடாமல், அழகாய், அதே சமயம் இயல்பாய் படமாய் எடுக்க முடிந்தது, ஆச்சரியம். தென் அமெரிக்கவின் அழகை கேமரா சுற்றி வர, 120 நிமிடங்கள் படம் நம் கவனத்தை முழுதாய் எடுத்துக் கொள்கிறது. நடித்த நடிகர்கள், இசை, கேமரா என்று ஒவ்வொன்றும் கவனத்தைக் கவர்ந்தது. கட்டாயம் பார்க்க வேண்டிய படம். USல் படம் ஓடவில்லை. "ச்சே"வின் பெயரால் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

2005/01/09

விதிமுறைகள், சட்டங்கள், ... 2

Terminal என்று ஒரு படம் பார்த்தேன். உலகின் இரண்டாம் பெரிய குடியரசின் சட்டம் எப்படி இருக்கிறது, அதன் வளையாத்தன்மை பற்றித் தான் மொத்த படமும். இவர்களின் சட்டப்படி இந்த ஊரில் நுழைவதற்காக விசா வாங்கி நீங்கள் விமானம் ஏறினாலும், உங்களை உள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. விமான நிலையத்தில் பிடித்து திருப்பி அனுப்பலாம், உள்ளே நுழைய இவர்கள் வைத்து இருக்கும் சட்டங்கள், நீங்கள் பயணிக்கும் போது மாறலாம், மாறினால், இங்கு வந்து இறங்கிய உடன் நீங்கள் என்ன செய்யலாம் ? அதேபோல் உங்களை திருப்பி அனுப்ப சில சட்டங்கள் உண்டு. அது மாறினால் என்ன செய்யலாம் ?

உங்களுக்கு திருப்பி அனுப்பும் சட்டமும் பொருந்தாமல், உள்ளே நுழையும் சட்டமும் பொருந்தாமல் போனால் நீங்கள் என்ன செய்யலாம் ? இதற்கான பதில் தான் படம். சற்றே அதிகமான கற்பனை (ஒரு அரசங்கமே இல்லாமல் போகிறது) என்றாலும், அப்படி ஏதாவது நடந்தால் படத்தில் Tom Hanks படும் அத்தனை கஷ்டமும் பட வாய்ப்பு 200 % இருக்கிறது.

சட்டம் எதற்காவது உதவுமா என்பதற்க்கு, Tom Hanks அப்பாவுக்கு மருந்து கொண்டு போகும் ஒருவருக்கு உதவுவதில் ஆரம்பித்து, பல காட்சிகள் உதவாது என்று சொல்கிறது. (அதில் இருக்கும் ஓட்டைகள் தான் உதவுகின்றது) இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று சொல்பவர்களுக்காக - முதல் காட்சி (அரசாங்கம் கவிழ்வது) நடந்தால், மற்ற அனைத்தும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இங்கு இருக்கும் சட்டம் அப்படித்தான் இருக்கிறது. அதை அமல்படுத்துபவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

2005/01/08

விதிமுறைகள், சட்டங்கள் ...

சில நாட்களுக்கு முன்னால் வலைப்பதிவில் எப்படி எழுத வேண்டும் என்று விதிமுறை இயற்றலாம் என்று ஒரு வலைப்பதிவில் படித்தேன். அதுவும் தமிழ்மணத்தினால் திரட்டப்படும் வலைப்பதிவுகளுக்காக என்று படித்ததாய் நினைவு. (எங்கே என்று நினைவு இல்லை). பொதுவாய் இந்த விதிமுறைகள், சட்டங்கள் என்றாலே அரை மைல் தள்ளி நிற்கும் பழக்கம் எனக்கு உண்டு. எதற்காக இவை தேவை ? யார் இவற்றை உருவாக்குவது ? இவை எல்லாம் எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்விகள். இதைப் பற்றி யோசிக்க யோசிக்க இவை மேல் எந்த மரியாதையும் வருவதே இல்லை. அது POTA வாக இருக்கட்டும், உலகின் இரண்டாம் பெரிய குடியரசில் திருமணம் பற்றியதாய் இருக்கட்டும், வலைப்பதிவில் எப்படி எழுத வேண்டும் என்பதாக இருக்கட்டும், பெரிய வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை. நல்ல வேளை, தமிழ்மணத்தில் அப்படி எதுவும் செய்யவில்லை.

அப்படி சொன்னவர், இந்த வலைப்பதிவில், எருமை என்று சொன்னதற்க்கு எதிராய் தான், விதிமுறை வேண்டும் என்று சொல்லி இருந்தார். அப்போது நினைவுக்கு வந்தது - சிறு வயதில் என் அப்பா இப்படித் தான் திட்டுவார் ...
"எட்டேகால் லட்சணமே ..
எமன் ஏறும் வாகனமே ..
முட்ட மேற் கூரையில்லா வீடே .."

இப்படியே போகும். யார் எழுதியது தெரியவில்லை. ஆனால் ஆசையாய் சிரித்துக் கொண்டே "இங்கே வா ராசா" சொல்லும் குரலில் சொன்னால், பார்ப்பவர்களுக்கு கொஞ்சுவது போல் இருக்கும் ! நமக்கே திட்டு விழுகிறது என்பது கொஞ்சம் தாமதமாய் தான் புரியும். குட்டிச்சுவரே, என்பதை விட இதை கேட்கலாம் என்று தோன்றும். இனி அப்படித் தான் திட்ட வேண்டும் போல் இருக்கிறது.

2005/01/05

I am back

After a week of exams and 2 weeks of vacation that forced me away from blogging - I am back. Spent the two weeks of vacation with movies, books and snow (at Dallas). Some of the movies I watched - Incredibles (excellent graphics), Sideways (watch it especially if you love wine though that need not be the only reason), One flew over cuckoo's nest (classic), Life is beautiful (a movie that was in my list to watch for a long time), Bourne supremacy (Hollywood crap) and some very old Tamil movies. Finished Hannibal and reading We the Living. Isn't that an excellent way to spend a vacation :-)