2005/04/02

தமிழக பொறியியல் கல்லூரிகள்

10 வருடம் முன்னால் கிட்டதட்ட 15 பொறியியல் கல்லூரிகள் இருந்த இடத்தில் இன்று 200க்கும் மேற்பட்டவை இருக்கின்றது. இந்த அதிவேகமான வளர்ச்சி ஆரோக்கியமானதா, இப்படி காளான் போல் முளைத்த கல்லூரிகளின் நிலை என்ன என்பதை பற்றி எழுதத் தான் இந்த பதிவு. அமெரிக்கா வந்து இரண்டு வருடத்திற்க்கு மேல் ஆகி விட்டாலும் மற்ற நண்பர்களோடும், சில ஆசிரியர்களோடும், சில மாணவர்களோடும் பேசியதை வைத்தே இந்த பதிவு தொடர்கிறது. அதற்கும் மேலாக நம் ஊர் அரசியல்வாதிகள் மேல் நான் வைத்து இருக்கும் நம்பிக்கை இரண்டு வருடத்தில் எதுவும் மாறாது என்று சொல்கிறது. (நம்பிக்கை இல்லாதவர்கள் "சோ"வின் முகமது பின் துக்ளக் பார்க்கலாம். 25 வருடம் ஆகியும் எதுவும் மாறவில்லை.) சுயநிதி பொறியியற் கல்லூரிகள் நடத்துவது பெரும்பாலும் அரசியல்வாதிகள் என்பதால் தான் இந்த நம்பிக்கை.

முதலில் இந்த கல்லூரிகள் துவங்குபவர்களின் நோக்கம் என்ன. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை ஒளிமயமான இந்தியாவின் தூண்களை எழுப்புவது போல் எல்லாம் தெரியவில்லை. முதல் நோக்கம் அதனை ஒரு தொழிலாய் பார்ப்பதால் லாபம் சம்பாதிப்பது தான். ஆனால் எளிதாய் லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு இப்போது இது சுலபமான தொழில் அல்ல. 7-8 வருடம் முன்னால் அப்படி இருந்த போது கன்ஸ்யுமர்களான மாணவர்கள் மற்றும் காசைக் கொட்டும் பெற்றோர்கள் நிலை படு மோசமாகத்தான் இருந்தது. இப்போது demand (படிக்க வரும் மாணவர்கள்) குறைந்து, சப்ளை (காலி இடங்கள்), அதிகரித்து இருப்பதால் quality, infrastructure போன்ற மற்ற விஷயங்களில் கவனம் திரும்பி இருக்கிறது. இதனால் முன்பு இருந்தது போல் மோசமான நிலை இல்லை என்றாலும் சந்தோஷப்படும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை.

Anna University, REC போன்ற சில கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான மற்ற கல்லூரிகளுக்கு அடுத்து வருபவை பொருந்தும். முதலில் Quality of Education. இந்த கல்லூரிகளில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள். இதில் இரண்டு வகை. பல்கலைகழகத்தின் பாடத்திட்டத்தை சொல்லிக் கொடுப்பவர்கள், autonomus என்பதால் தங்கள் பாடத்திட்டத்தை தாங்களே உருவாக்குபவர்கள்.

முதல் வகை பெரும்பாலும் காளான் கல்லூரிகள். கட்டாயமாய் சொல்லி கொடுக்க வேண்டிய ஒரு பாடம் இருக்க, இருக்கும் ஆசிரியர்களை அதில் ஏதாவது ஒன்றை சொல்லி கொடுக்க வைக்கிறார்கள். இந்த ஆசிரியர் தேர்வு எப்படி நடக்கும் என்று நான் பார்த்த வரை புரிந்தது இது தான். அதிக நாள் வேலை பார்த்தவர்கள் அவர்கள் ஏற்கனவே சொல்லித் தந்த பாடத்தை எடுத்துக் கொள்வார்கள் (உ-ம் Algorithms, c programming ). புதிதாய் வந்தவர்கள் தலையில், புதிதாய் சேர்க்கப்பட்ட ஒரு பாடம் கட்டப்படும். (உ-ம் : Data Mining) . அவரும் மாணவர்களோடு சேர்ந்து படிக்கும் நிலையில் தான் இருப்பார். அப்படி ஒரு பாடம் எதற்காக சேர்க்கப்பட்டது, அதைப் படிப்பதால் என்ன பயன், ஒரு கத்திரிக்காயும் நடுத்துபவருக்கும் தெரியாது, படிக்கும் மாணவருக்கும் தெரியாது. மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கப்படும் பழைய பாடத்தின் நிலையும் சொல்லிக் கொள்வது போல் இருக்காது. வேகமாய் மாறும் Computer Science போன்ற பிரிவில் இல்லாவிட்டால் கூட, அடிப்படை மாறாமல் இருக்க Engineering இன்னும் கணக்கு போன்ற நிலைக்கு வரவில்லை. ஆனால் இந்த மாற்றம் நம் மூத்த ஆசிரியருக்கு பெரும்பாலும் எட்டி இருக்காது. புதிய மற்றும் பழைய ஆசிரியர்களுக்கு பிடிக்காத (இல்லை புரியாத) சில பாடங்கள் நடத்தாமல் விடப்படும் (உ-ம் Algorithmsல் - NP-Completeness) . Syllabus முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இங்கு கிடையாது. மாணவர்கள் தானாகவே பின்னர் படித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

Autonomous என்று சொல்லிக் கொள்ளும் கல்லூரிகளில் நிலை எப்படி இருக்கிறது. பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அவர்களே உருவாக்கியது என்றாலும் மற்றவர்களிடம் (Companies, AICTE committee..) காண்பிக்க வேண்டி இருப்பதால் இவர்களும் புதிய பாடங்களை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் எல்லா பாடங்களும் எடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை. புதிய பாடங்களை electives என்று சேர்த்துவிட்டு எல்லோருக்கும் காட்டலாம். ஆனால் இவை அனைத்தையும் நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. அவர்களுக்கு பிடித்ததை நடத்தினால் போதுமானது. அவற்றை நடத்துவதிலும் மேலே சொன்ன நிலை பொருந்தும். இத்தகைய கல்லூரிகளில் இன்னொரு முக்கிய பிரச்சினை தோன்றி இருக்கிறது. இங்கு பாடத்திட்டம் வகுப்பது ஒரு சிறிய குழு தான். படிக்கும் மாணவர்களில், வேலை வாங்கியவர் சதவீதம் கல்லூரியின் தரக் குறியீடாய் இருப்பதால், இந்த குழு MNC க்களை சந்தித்து பேசுகிறது. அவர்கள் சில பாடங்களை பரிந்துரைக்கிறார்கள். அது பாடத்திட்டம் ஆகிறது.

இதில் சில எழுதா ஒப்பந்தங்கள் (இந்த வருடம் கம்பெனிக்கள் 10 மாணவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்), சில எழுதிய ஒப்பந்தங்கள் (MOUs) உருவாகும். இது மாணவர்கள் நலனுக்காக என்று சொல்லப்படும். ஆனால் நடப்பது என்ன என்று கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரியும். உ-ம் இத்தகைய ஒப்பந்தங்களை போடும் IBM நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், பாடதிட்டத்தில் அவர்களது இஷ்ட பாடங்கள் சேர்க்கப்படும். அல்லது கல்லூரியே அவர்கள் certification பாடங்களை மாணவர்களுக்கு பரிந்துரைக்கும். இப்படி DB2 என்ற databaseம், websphere என்ற IBMன் serverம் படித்துவிட்டு மாணவர்கள் வெளியே வருகின்றனர். இது IBM போன்ற நிறுவனத்தின் தந்திரம். Developer base அதிகம் ஆவதால் அவர்கள் பல வருடம் நிலைத்து நிற்க செய்யும் உத்தி.

ஆனால் மாணவர்கள் இதனால் ஒரு software/computer எப்படி வேலை செய்யும் என்பதற்க்கு பதிலாய், IBM software/computer எப்படி வேலை செய்யும் என்று படிக்கிறார்கள் (அவற்றில் சிலவை 1970களில் வந்தது என்றாலும் கூட) . Aptech, NIIT போன்ற இடங்கள் செய்ததை இப்போது கல்லூரிகள் செய்கின்றன. அடிப்படைகள் தெரியாமல், வேலை செய்ய தேவையானதை மட்டும் கற்றுக் கொடுக்கின்றன. (அதனையும் மேலே சொன்னது போல் syllabus முடிக்காமல், என்ன சொல்லித் தருகிறோம் என்று புரியாமல் செய்வது இன்னும் பரிதாபம்)

இதனை படித்து வரும் மாணவர்கள் Computer/Software engineer என்றில்லாமல் software programmers ஆக வெளியே வருகிறார்கள். Computer scientist என்பது இந்த அஸ்திவாரத்தோடு எளிதாய் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. Switch போட்டால் light எரியும் என்று ஒரு electrical engineer சொன்னால் எவ்வளவு ஏமாற்றமாய் இருக்கும். அது போல் தான், இன்றைய computer engineerகள் வெளியே வருகிறார்கள். பாதி பேருக்கு, அவர்கள் தினம் வேலை செய்யும் Pentium க்கும், கல்லூரியில் படித்த 8085 க்கும் 6 வித்தியாசம் சொல்வது சிரமம். வருத்ததிற்க்குரிய விஷயம் electrical engineer களையும் அவசரமாய் computer programmers ஆக மாற்றி வருகின்றன நம் கல்லூரிகள். இது தான் Quality of Education.

இன்னும் கல்லூரிகளின் Infrastructure, மாணவர்கள் தரம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மனப்போக்கு, எல்லாம் வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

5 comments:

Badri Seshadri said...

சிவா: சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஏமாற்றமளிக்கும் கல்வியைக் கொடுத்தாலும் ஒருவகையில் நல்ல காரியத்தைச் செய்துள்ளன. பொறியியல் படிக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ள பல இளைஞர்களுக்கு ஒரு வழி கிடைத்துள்ளது. ஆசிரியர்கள் கேவலமாக இருந்தாலும் பாடப்புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு, விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு, தட்டுத்தடுமாறியாவது படிக்கிறார்கள் (ஒருசிலரேனும்).

பின் பட்டமேற்படிப்புக்கு நல்ல கல்லூரிகளில் சிலருக்கு இடம் கிடைக்கிறது. வெகுவானவர்கள் கணினி மென்பொருளாக்கத் துறைக்குச் செல்கிறார்கள். பலர் மேலாண்மைப் படிப்புக்குச் செல்கிறார்கள்.

இதெல்லாம் நன்மைகளே.

சுயநிதி பொறியியல் கல்லூரிகள் எல்லாம் ஊழல் நிறைந்தவையாக இருந்தும், காலத்தின் போக்கில் சிலவாவது நல்லவையாக மாறும். அதை மாணவர்கள் சரியாகவே இனங்கண்டு கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் தொல்லையே.

Siva said...

பத்ரி, பல படிக்கும் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது, என்று சொல்வதை விட குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துவிட்டு, வருடம் 10000 ரூபாய் கட்ட முடிந்தால், எல்லோரும் பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை இது. அது ஊருக்கு நல்லதாய் தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் அதனாலான வளர்ச்சி கட்டாயம் தெரிகிறது. பொறியியல் துறைக்கு நல்லதா என்றால் சந்தேகம் இல்லையா.

ஆனால் அந்த படிப்பு, ஒரு பொறியியல் வல்லுநரை உருவாக்காமல், கணினி மென்பொருள் வல்லுநரை மட்டுமே உருவாக்குகிறது என்பது தான் வேண்டாம் என்று தோன்றுகிறது. அதை நன்மை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

சில கல்லூரிகள் நல்லவையாக மாறும் என்று நம்புவோம். அது வரை வேறு துறைகளில் சிறந்த மாணவர்கள் சிலர், பொறியியல் மோகத்தால், அதிகம் விஷயம் தெரியாமல், மோசமான கல்லூரியில் சேர்ந்து, நாறோடு சேர்ந்து பூவும் நாறும் கதை நடக்கிறதே என்ற வருத்தமும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

பட்ட மேற்படிப்புக்கு வருபவர்கள் பற்றி கட்டாயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். அடுத்து வரும் பதிவுகளில் அதைப் பற்றி எழுதுகிறேன்.

பி.கு : சுயநிதிக் கல்லூரிகள் மட்டும் அல்ல, சில அரசு கல்லூரிகளும் இவ்வாறே இயங்குகின்றன. (காசு குறைவு அவ்வளவு தான்)

Pavals said...

பொறியியல் கல்லூரியில சேரப்போற மாணவர்களும், அவுங்கள சேர்த்து விடுற பெத்தவங்களும், அவுங்க நல்ல சொல்லித்தர்றாங்களான்னு பார்ப்பாங்களா இல்லை கேம்பஸ் இண்டிர்வியு மாதிரி சமாச்சரங்கள பார்ப்பங்களா??

//இதனை படித்து வரும் மாணவர்கள் Computer/Software engineer என்றில்லாமல் software programmers ஆக வெளியே வருகிறார்கள்.//
5வது செனஸ்ட்டர்ல படிக்கும் போதே போட்டி போட்டுகிட்டு வந்து வேலைக்கு எடுக்கிறாங்க இன்னைக்கு.. அவன் அப்பத்தான் software engg'கே படிக்கறான்.. ஆனா aptitude test க்ளியர் செஞ்சா போதும் வேலை கிடைக்கும்ங்கிற நிலைமை (அதுக்கு மேல 5பது செமஸ்ட்டர் படிக்கிற பையன்கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்).. அதுனால அதுக்கு தனியா ஆள்போட்டு, கோச்சிங் செண்டர் மாதிரித்தான் இன்னைக்கு டாப்'புல இருக்கிற கல்லூரிகளோட நிலைமை இருக்குது.. பாடத்த பத்தி கவலைப்படுறது எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் நம்ம 'கன்ஸ்யூமரு'க்கு.. அதுனால தான் இந்த நிலைமை

//வருடம் 10000 ரூபாய் கட்ட முடிந்தால், எல்லோரும் பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. // எந்த காலத்துல இருக்கீங்க சிவா, நாம படிக்கும் போதுதான் இந்த காசு (அப்போ வருஷம் 6000 ருபா) இப்போ free seat/payment எல்லாம் கிடையாது எல்லாருக்கும் 32000 ரூபா.. அந்த அளவிலயாவது பொறியியல் கல்லூரிகளோட தரம் உயர்ந்திருக்கு :-)

இதுக்கு எல்லாம் தீர்வு.. வழக்கமா பெரியவங்க சொல்ற மாதிரி 'நம்ம systemஏ சரியில்லை, அதை மாத்தனும்' :-D

//பி.கு : சுயநிதிக் கல்லூரிகள் மட்டும் அல்ல, சில அரசு கல்லூரிகளும் இவ்வாறே இயங்குகின்றன. (காசு குறைவு அவ்வளவு தான்)// இங்கயும் அதே aptitude test சமாச்சாரம் தான்..

கேம்பஸ்ல வேலை கிடைக்காம வெளிய போய் வேலை தேடி technical interview போகும் போதுதான், பாடத்த பத்தியே நம்மாளுக நினைக்கிறாங்க..

Siva said...

// எந்த காலத்துல இருக்கீங்க சிவா, நாம படிக்கும் போதுதான் இந்த காசு (அப்போ வருஷம் 6000 ருபா) இப்போ free seat/payment எல்லாம் கிடையாது எல்லாருக்கும் 32000 ரூபா.. அந்த அளவிலயாவது பொறியியல் கல்லூரிகளோட தரம் உயர்ந்திருக்கு :-) //

தப்பு தாங்க .. 32000 ஆனதைப் படிச்சேன், எழுதும் போது தான் கோட்டை விட்டுட்டேன்.

மாணவர்களைப் பற்றி நீங்களே சரியா சொல்லி இருக்கீங்க. தனியா ஒரு பதிவே அடுத்து எழுதலாம்னு நினைச்சு இருக்கேன். அதில் பேசுவோம்.

//இதுக்கு எல்லாம் தீர்வு.. வழக்கமா பெரியவங்க சொல்ற மாதிரி 'நம்ம systemஏ சரியில்லை, அதை மாத்தனும்' :-D //

கல்லூரிகள் ஆரம்பிச்சதை சொன்னீங்கன்னா, என் பதில் இல்லை. கல்லூரிகள் துவங்கியது சரியான் விஷ்யம் தான். கொஞ்சம் அதிகமா பண்ணிட்டோம் அதான் பிரச்சினை. எல்லோரையும் BE படிக்க வைக்கும் அளவுக்கு பண்ணிட்டோம். இப்போ அதை மாத்த முடியாது.

கல்லூரிகள் நடத்தும் விதம் தான் system ன்னு சொன்னீங்கன்னா, என் பதில் ஆமா. அதை மாத்தணும். காலத்தின் போக்கில் சிலவை நல்லவையா மாறும் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் அது வரை நம்ம கன்ஸ்யூமர்ஸ் என்ன பண்ண வேண்டும், பால் எது கள் எது என்று தெளிவா புரிஞ்சுக்கனும்னு தான் என் ஆசை எல்லாம்.

Unknown said...

இந்திய மொழிகளில் முதன் முறையாக.

முதல் இந்திய மின்னணுவியல் தரவுத்தாள் தளம்

தமிழ் தரவுத்தாள் தளம்

www.tamildata.co.cc

First Electronics Engineering Resource in Tamil