2005/04/05

தமிழக பொறியியல் கல்லூரிகள் - 2

நம் பொறியியல் கல்லூரிகளில் பாடம் தான் சொல்லிக் கொடுப்பதில்லை, படிக்க நினைக்கும் மாணவன் படிக்கும் அளவிற்க்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா ? அரசின் ஆதரவால் இயங்கும் autonomous கல்லூரியில் படித்தவன் நான். நான் படித்த 4 வருடமும் 30 மாணவர்கள் இருந்தால், 10 கணிணி இருக்கும். நான், என் நண்பன், இன்னும் ஒரு பெண் ஒரு கணிணிக்கு போட்டி போட வேண்டும். யார் வேலை செய்து இருப்பார்கள் என்று சொல்லவே வேண்டாம், எல்லோருக்கும் தெரியும். 6 வருட முன்னால் நிலை இது. இப்போது எப்படி என்று போய் தான் பார்க்க வேண்டும். ஆனால் அரசின் ஆதரவோடு இயங்கிய கல்லூரி இப்படி என்றால் சுயநிதி கல்லூரிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். திருமண மண்டபத்தில் விடுதி, ஒரே ஒரு 4 மாடி கட்டிடத்தில் மொத்த கல்லூரி (இது மதுரையில் இருந்தது), எந்த துறைக்கும் உருப்படியான ஆய்வங்கள் இல்லாமல் கல்லூரி நடத்துவது, என்ற அத்தனையும் உண்டு. ஏதாவது கேட்டால் ஆய்வகத்திற்க்கு தனியே ஒரு கட்டணம் போட்டு பேருக்கு ஒன்றை துவங்குவார்கள்.

நம் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் ? முதலில் பெற்றோர்கள். இவர்களை பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் குளருபடிகளுக்கு காரணமாய் சொல்ல முடியாது. இவர்களின் ஆர்வம் எல்லாம் தங்கள் பிள்ளைகள் எல்லாம் நன்றாக வர வேண்டும் என்பது தான். ஆனால் அந்த ஆர்வம் மேலிட சில சிறிய தவறுகளை செய்கின்றனர். ஒன்று எங்கு பொறியியல் படித்தாலும் பிள்ளை பெரிய ஆளாக வருவான் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் ஒரு கல்லூரியை பற்றி ஆராயமல் கொண்டு போய் சேர்ப்பது. வருடம் 32000 ரூபாய் போடுகிறார்கள், அது கூடவா செய்ய மாட்டார்கள் என்று கேட்பீர்கள். ஆனால் அது தான் உண்மை. உ-ம் என் சொந்த ஊரில் ஒரு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது. அதற்கான இடம் 2 சிறிய கட்டிடங்கள். அந்த கட்டிடத்தில் 4 வருட மாணவர்கள், 3 துறையினர், அத்துனைக்கும் ஆய்வகங்கள் எல்லாம் எங்கு இருந்தன என்பது புரியாத புதிர். (விடை : அவை எதுவும் இல்லை). தமிழகம் முழுதும் அண்ணா பல்கலைகழக பாடத்திட்டத்திற்க்கு மாறிய பொழுது, கல்லூரியில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒரு பாடத்திலாவது முட்டை வாங்கியதாக கேள்வி. ஒரு அப்பா மதிப்பெண் அவரே போய் பார்த்துவிட்டு வந்து சொன்னது "அட நம்ம பொண்ணு தான் படிக்கலைன்னு நினைச்சேன், மொத்த காலெஜும் அப்படி தான் இருக்கு". ஊர்க்காரர் ஒருத்தரைக் கேட்டால் போதும் அங்கே பிள்ளையை சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் அடுத்த வருடமும் அங்கே மாணவர்கள் சேர்ந்தார்கள். இது பொறியியல் மீது இருக்கும் மோகத்தால் தீர விசாரிக்காமல் பிள்ளைகளை கொண்டு போய் சேர்ப்பதால் வரும் பிரச்சினை.
ஆனால் இவர்களை முழுதாக குறை சொல்ல முடியாது. உண்மையில் ஒரு கல்லூரி பற்றி தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு தேவையான தகவல்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. சென்னையில் இருக்கும் ஒரு மாணவி, REC குருஷேத்ரா, சென்னையில் இருக்கும் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி, இரண்டிலும் கிடைத்தால் எதனை எடுக்கலாம். வட இந்திய வரை கூட போக வேண்டாம், கோயம்பத்தூர் கல்லூரி ஒன்றுக்கும், சென்னை கல்லூரி ஒன்றுக்கும் என்ன வித்தியாசம். இங்கு பஸ் கட்டணம், கட்டாய மதிய சாப்பாடு கல்லூரியில் என்று தண்டம் கொடுப்பதை, மாதம் விடுதிக்கு கொடுத்தால் நல்ல கல்லூரியில் படிக்க முடியுமா. இப்படி எல்லா தகவலும் தொகுத்து வைத்து இருக்கும் ஒரு இடம் இல்லை. அமெரிக்க கல்லூரிகளை U.S.News வரிசைப் படுத்துவது போல் நம் கல்லூரிகளை வரிசைப்படுத்தும் ஒரு நல்ல தரவரிசை இல்லை. இதை யாராவது செய்தால் பெற்றவர்களின் புண்ணியத்தைப் பெறுவார். ஒன்றரை லட்சம் கொடுக்கும் முன்னே 150 ரூபாய் புத்தகம் ஒன்று காசு போட்டு வாங்குவார்கள்.

பொறியியல் கல்லூரி மாணவர்களைப் பற்றி இன்னும் ஒரு பதிவு எழுத வேண்டும்.

1 comment:

Pavals said...

/தமிழகம் முழுதும் அண்ணா பல்கலைகழக பாடத்திட்டத்திற்க்கு மாறிய பொழுது, கல்லூரியில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒரு பாடத்திலாவது முட்டை வாங்கியதாக கேள்வி//

அந்த கூத்தில அண்ணா பல்கலைகலகத்துக்கு பெரிய பங்கு இருந்துச்சுங்க.. ( உ.ம். சும்மா DC motorன்னு சிலபஸ் குடுத்தா, அவனவன் ஒவ்வொரு காலேஜ்லயும் அவனவனுக்கு புடிச்ச 3-4 மோட்டார நடத்தி விட்டுட்டாங்க, ஆனா கேள்வித்தாள் எடுத்த ஆளுகளுக்கு அவுங்களுக்கு என்ன முக்கியம்னு பட்டுதோ அதை கேட்டு வச்சாங்க.. the syllb. Anna university followed may be fitted for a Autonomus istiti, but its not the case when the same goes for 234 afflicated colleges..இப்போ எதோ மறுபடியும் 2004லைருந்து புது regulationsக்கு போயிருக்கிறதா கேள்வி.. விசாரிக்கனும்..

/அமெரிக்க கல்லூரிகளை U.S.News வரிசைப் படுத்துவது போல் நம் கல்லூரிகளை வரிசைப்படுத்தும் ஒரு நல்ல தரவரிசை இல்லை.//
இது நிஜம்.. போன வருஷம் அண்ணா யூனிவர்சிடி ஒரு லிஸ்ட் வெளியிட்டாங்க, ஆனா அதுல நிறையா குழப்பம், அவுங்க ஒரு கல்லூரியில மொத்தம் பரிட்ச்சை எழுதினவங்க vs பாஸ் ஆனவங்கள வச்சு வரிசை படுத்தினாங்க, அதுனால, ssn மாதிரி வெறும் 4 டிபார்ட்மெண்ட் வெச்சிருக்கவங்க எல்லாம் கலசலிங்கம் காலேஜ் மாதிரி 12-13 டிபார்ட்மெண்ட் வெச்சிருக்கரவங்க கூட போட்டி போட்டு முதல் இடத்துக்கு வந்துட்டாங்க.. (இந்த லிஸ்ட் வெளியிட்டதுல தான் பாலகுருசாமி'க்கும் சென்னை 'கல்வி காவலருக்கும்' பெரிய சண்டைன்னு பேசிக்கறாங்க)
வேற யாராவது சார்பில்லாத ஆளுக லிஸ்ட் போடலாம்தான், ஆனா அது எந்த அரசியலும் இல்லாம நடக்கும்னு நினைக்கிறீங்களா??