2005/04/05

தமிழக பொறியியல் கல்லூரிகள் - 2

நம் பொறியியல் கல்லூரிகளில் பாடம் தான் சொல்லிக் கொடுப்பதில்லை, படிக்க நினைக்கும் மாணவன் படிக்கும் அளவிற்க்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா ? அரசின் ஆதரவால் இயங்கும் autonomous கல்லூரியில் படித்தவன் நான். நான் படித்த 4 வருடமும் 30 மாணவர்கள் இருந்தால், 10 கணிணி இருக்கும். நான், என் நண்பன், இன்னும் ஒரு பெண் ஒரு கணிணிக்கு போட்டி போட வேண்டும். யார் வேலை செய்து இருப்பார்கள் என்று சொல்லவே வேண்டாம், எல்லோருக்கும் தெரியும். 6 வருட முன்னால் நிலை இது. இப்போது எப்படி என்று போய் தான் பார்க்க வேண்டும். ஆனால் அரசின் ஆதரவோடு இயங்கிய கல்லூரி இப்படி என்றால் சுயநிதி கல்லூரிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். திருமண மண்டபத்தில் விடுதி, ஒரே ஒரு 4 மாடி கட்டிடத்தில் மொத்த கல்லூரி (இது மதுரையில் இருந்தது), எந்த துறைக்கும் உருப்படியான ஆய்வங்கள் இல்லாமல் கல்லூரி நடத்துவது, என்ற அத்தனையும் உண்டு. ஏதாவது கேட்டால் ஆய்வகத்திற்க்கு தனியே ஒரு கட்டணம் போட்டு பேருக்கு ஒன்றை துவங்குவார்கள்.

நம் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் ? முதலில் பெற்றோர்கள். இவர்களை பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் குளருபடிகளுக்கு காரணமாய் சொல்ல முடியாது. இவர்களின் ஆர்வம் எல்லாம் தங்கள் பிள்ளைகள் எல்லாம் நன்றாக வர வேண்டும் என்பது தான். ஆனால் அந்த ஆர்வம் மேலிட சில சிறிய தவறுகளை செய்கின்றனர். ஒன்று எங்கு பொறியியல் படித்தாலும் பிள்ளை பெரிய ஆளாக வருவான் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் ஒரு கல்லூரியை பற்றி ஆராயமல் கொண்டு போய் சேர்ப்பது. வருடம் 32000 ரூபாய் போடுகிறார்கள், அது கூடவா செய்ய மாட்டார்கள் என்று கேட்பீர்கள். ஆனால் அது தான் உண்மை. உ-ம் என் சொந்த ஊரில் ஒரு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது. அதற்கான இடம் 2 சிறிய கட்டிடங்கள். அந்த கட்டிடத்தில் 4 வருட மாணவர்கள், 3 துறையினர், அத்துனைக்கும் ஆய்வகங்கள் எல்லாம் எங்கு இருந்தன என்பது புரியாத புதிர். (விடை : அவை எதுவும் இல்லை). தமிழகம் முழுதும் அண்ணா பல்கலைகழக பாடத்திட்டத்திற்க்கு மாறிய பொழுது, கல்லூரியில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒரு பாடத்திலாவது முட்டை வாங்கியதாக கேள்வி. ஒரு அப்பா மதிப்பெண் அவரே போய் பார்த்துவிட்டு வந்து சொன்னது "அட நம்ம பொண்ணு தான் படிக்கலைன்னு நினைச்சேன், மொத்த காலெஜும் அப்படி தான் இருக்கு". ஊர்க்காரர் ஒருத்தரைக் கேட்டால் போதும் அங்கே பிள்ளையை சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் அடுத்த வருடமும் அங்கே மாணவர்கள் சேர்ந்தார்கள். இது பொறியியல் மீது இருக்கும் மோகத்தால் தீர விசாரிக்காமல் பிள்ளைகளை கொண்டு போய் சேர்ப்பதால் வரும் பிரச்சினை.
ஆனால் இவர்களை முழுதாக குறை சொல்ல முடியாது. உண்மையில் ஒரு கல்லூரி பற்றி தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு தேவையான தகவல்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. சென்னையில் இருக்கும் ஒரு மாணவி, REC குருஷேத்ரா, சென்னையில் இருக்கும் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி, இரண்டிலும் கிடைத்தால் எதனை எடுக்கலாம். வட இந்திய வரை கூட போக வேண்டாம், கோயம்பத்தூர் கல்லூரி ஒன்றுக்கும், சென்னை கல்லூரி ஒன்றுக்கும் என்ன வித்தியாசம். இங்கு பஸ் கட்டணம், கட்டாய மதிய சாப்பாடு கல்லூரியில் என்று தண்டம் கொடுப்பதை, மாதம் விடுதிக்கு கொடுத்தால் நல்ல கல்லூரியில் படிக்க முடியுமா. இப்படி எல்லா தகவலும் தொகுத்து வைத்து இருக்கும் ஒரு இடம் இல்லை. அமெரிக்க கல்லூரிகளை U.S.News வரிசைப் படுத்துவது போல் நம் கல்லூரிகளை வரிசைப்படுத்தும் ஒரு நல்ல தரவரிசை இல்லை. இதை யாராவது செய்தால் பெற்றவர்களின் புண்ணியத்தைப் பெறுவார். ஒன்றரை லட்சம் கொடுக்கும் முன்னே 150 ரூபாய் புத்தகம் ஒன்று காசு போட்டு வாங்குவார்கள்.

பொறியியல் கல்லூரி மாணவர்களைப் பற்றி இன்னும் ஒரு பதிவு எழுத வேண்டும்.

2005/04/02

தமிழக பொறியியல் கல்லூரிகள்

10 வருடம் முன்னால் கிட்டதட்ட 15 பொறியியல் கல்லூரிகள் இருந்த இடத்தில் இன்று 200க்கும் மேற்பட்டவை இருக்கின்றது. இந்த அதிவேகமான வளர்ச்சி ஆரோக்கியமானதா, இப்படி காளான் போல் முளைத்த கல்லூரிகளின் நிலை என்ன என்பதை பற்றி எழுதத் தான் இந்த பதிவு. அமெரிக்கா வந்து இரண்டு வருடத்திற்க்கு மேல் ஆகி விட்டாலும் மற்ற நண்பர்களோடும், சில ஆசிரியர்களோடும், சில மாணவர்களோடும் பேசியதை வைத்தே இந்த பதிவு தொடர்கிறது. அதற்கும் மேலாக நம் ஊர் அரசியல்வாதிகள் மேல் நான் வைத்து இருக்கும் நம்பிக்கை இரண்டு வருடத்தில் எதுவும் மாறாது என்று சொல்கிறது. (நம்பிக்கை இல்லாதவர்கள் "சோ"வின் முகமது பின் துக்ளக் பார்க்கலாம். 25 வருடம் ஆகியும் எதுவும் மாறவில்லை.) சுயநிதி பொறியியற் கல்லூரிகள் நடத்துவது பெரும்பாலும் அரசியல்வாதிகள் என்பதால் தான் இந்த நம்பிக்கை.

முதலில் இந்த கல்லூரிகள் துவங்குபவர்களின் நோக்கம் என்ன. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை ஒளிமயமான இந்தியாவின் தூண்களை எழுப்புவது போல் எல்லாம் தெரியவில்லை. முதல் நோக்கம் அதனை ஒரு தொழிலாய் பார்ப்பதால் லாபம் சம்பாதிப்பது தான். ஆனால் எளிதாய் லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு இப்போது இது சுலபமான தொழில் அல்ல. 7-8 வருடம் முன்னால் அப்படி இருந்த போது கன்ஸ்யுமர்களான மாணவர்கள் மற்றும் காசைக் கொட்டும் பெற்றோர்கள் நிலை படு மோசமாகத்தான் இருந்தது. இப்போது demand (படிக்க வரும் மாணவர்கள்) குறைந்து, சப்ளை (காலி இடங்கள்), அதிகரித்து இருப்பதால் quality, infrastructure போன்ற மற்ற விஷயங்களில் கவனம் திரும்பி இருக்கிறது. இதனால் முன்பு இருந்தது போல் மோசமான நிலை இல்லை என்றாலும் சந்தோஷப்படும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை.

Anna University, REC போன்ற சில கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான மற்ற கல்லூரிகளுக்கு அடுத்து வருபவை பொருந்தும். முதலில் Quality of Education. இந்த கல்லூரிகளில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள். இதில் இரண்டு வகை. பல்கலைகழகத்தின் பாடத்திட்டத்தை சொல்லிக் கொடுப்பவர்கள், autonomus என்பதால் தங்கள் பாடத்திட்டத்தை தாங்களே உருவாக்குபவர்கள்.

முதல் வகை பெரும்பாலும் காளான் கல்லூரிகள். கட்டாயமாய் சொல்லி கொடுக்க வேண்டிய ஒரு பாடம் இருக்க, இருக்கும் ஆசிரியர்களை அதில் ஏதாவது ஒன்றை சொல்லி கொடுக்க வைக்கிறார்கள். இந்த ஆசிரியர் தேர்வு எப்படி நடக்கும் என்று நான் பார்த்த வரை புரிந்தது இது தான். அதிக நாள் வேலை பார்த்தவர்கள் அவர்கள் ஏற்கனவே சொல்லித் தந்த பாடத்தை எடுத்துக் கொள்வார்கள் (உ-ம் Algorithms, c programming ). புதிதாய் வந்தவர்கள் தலையில், புதிதாய் சேர்க்கப்பட்ட ஒரு பாடம் கட்டப்படும். (உ-ம் : Data Mining) . அவரும் மாணவர்களோடு சேர்ந்து படிக்கும் நிலையில் தான் இருப்பார். அப்படி ஒரு பாடம் எதற்காக சேர்க்கப்பட்டது, அதைப் படிப்பதால் என்ன பயன், ஒரு கத்திரிக்காயும் நடுத்துபவருக்கும் தெரியாது, படிக்கும் மாணவருக்கும் தெரியாது. மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கப்படும் பழைய பாடத்தின் நிலையும் சொல்லிக் கொள்வது போல் இருக்காது. வேகமாய் மாறும் Computer Science போன்ற பிரிவில் இல்லாவிட்டால் கூட, அடிப்படை மாறாமல் இருக்க Engineering இன்னும் கணக்கு போன்ற நிலைக்கு வரவில்லை. ஆனால் இந்த மாற்றம் நம் மூத்த ஆசிரியருக்கு பெரும்பாலும் எட்டி இருக்காது. புதிய மற்றும் பழைய ஆசிரியர்களுக்கு பிடிக்காத (இல்லை புரியாத) சில பாடங்கள் நடத்தாமல் விடப்படும் (உ-ம் Algorithmsல் - NP-Completeness) . Syllabus முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இங்கு கிடையாது. மாணவர்கள் தானாகவே பின்னர் படித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

Autonomous என்று சொல்லிக் கொள்ளும் கல்லூரிகளில் நிலை எப்படி இருக்கிறது. பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அவர்களே உருவாக்கியது என்றாலும் மற்றவர்களிடம் (Companies, AICTE committee..) காண்பிக்க வேண்டி இருப்பதால் இவர்களும் புதிய பாடங்களை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் எல்லா பாடங்களும் எடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை. புதிய பாடங்களை electives என்று சேர்த்துவிட்டு எல்லோருக்கும் காட்டலாம். ஆனால் இவை அனைத்தையும் நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. அவர்களுக்கு பிடித்ததை நடத்தினால் போதுமானது. அவற்றை நடத்துவதிலும் மேலே சொன்ன நிலை பொருந்தும். இத்தகைய கல்லூரிகளில் இன்னொரு முக்கிய பிரச்சினை தோன்றி இருக்கிறது. இங்கு பாடத்திட்டம் வகுப்பது ஒரு சிறிய குழு தான். படிக்கும் மாணவர்களில், வேலை வாங்கியவர் சதவீதம் கல்லூரியின் தரக் குறியீடாய் இருப்பதால், இந்த குழு MNC க்களை சந்தித்து பேசுகிறது. அவர்கள் சில பாடங்களை பரிந்துரைக்கிறார்கள். அது பாடத்திட்டம் ஆகிறது.

இதில் சில எழுதா ஒப்பந்தங்கள் (இந்த வருடம் கம்பெனிக்கள் 10 மாணவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்), சில எழுதிய ஒப்பந்தங்கள் (MOUs) உருவாகும். இது மாணவர்கள் நலனுக்காக என்று சொல்லப்படும். ஆனால் நடப்பது என்ன என்று கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரியும். உ-ம் இத்தகைய ஒப்பந்தங்களை போடும் IBM நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், பாடதிட்டத்தில் அவர்களது இஷ்ட பாடங்கள் சேர்க்கப்படும். அல்லது கல்லூரியே அவர்கள் certification பாடங்களை மாணவர்களுக்கு பரிந்துரைக்கும். இப்படி DB2 என்ற databaseம், websphere என்ற IBMன் serverம் படித்துவிட்டு மாணவர்கள் வெளியே வருகின்றனர். இது IBM போன்ற நிறுவனத்தின் தந்திரம். Developer base அதிகம் ஆவதால் அவர்கள் பல வருடம் நிலைத்து நிற்க செய்யும் உத்தி.

ஆனால் மாணவர்கள் இதனால் ஒரு software/computer எப்படி வேலை செய்யும் என்பதற்க்கு பதிலாய், IBM software/computer எப்படி வேலை செய்யும் என்று படிக்கிறார்கள் (அவற்றில் சிலவை 1970களில் வந்தது என்றாலும் கூட) . Aptech, NIIT போன்ற இடங்கள் செய்ததை இப்போது கல்லூரிகள் செய்கின்றன. அடிப்படைகள் தெரியாமல், வேலை செய்ய தேவையானதை மட்டும் கற்றுக் கொடுக்கின்றன. (அதனையும் மேலே சொன்னது போல் syllabus முடிக்காமல், என்ன சொல்லித் தருகிறோம் என்று புரியாமல் செய்வது இன்னும் பரிதாபம்)

இதனை படித்து வரும் மாணவர்கள் Computer/Software engineer என்றில்லாமல் software programmers ஆக வெளியே வருகிறார்கள். Computer scientist என்பது இந்த அஸ்திவாரத்தோடு எளிதாய் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. Switch போட்டால் light எரியும் என்று ஒரு electrical engineer சொன்னால் எவ்வளவு ஏமாற்றமாய் இருக்கும். அது போல் தான், இன்றைய computer engineerகள் வெளியே வருகிறார்கள். பாதி பேருக்கு, அவர்கள் தினம் வேலை செய்யும் Pentium க்கும், கல்லூரியில் படித்த 8085 க்கும் 6 வித்தியாசம் சொல்வது சிரமம். வருத்ததிற்க்குரிய விஷயம் electrical engineer களையும் அவசரமாய் computer programmers ஆக மாற்றி வருகின்றன நம் கல்லூரிகள். இது தான் Quality of Education.

இன்னும் கல்லூரிகளின் Infrastructure, மாணவர்கள் தரம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மனப்போக்கு, எல்லாம் வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

2005/04/01

Motorcycle Diaries (எர்னெஸ்டோ "ச்சே" குவாரா ...)

பல நண்பர்கள் இந்த படத்தை பரிந்துரைத்து இருந்தாலும் பார்க்க முடியாமல் தள்ளிப் போன படங்களில் இதுவும் ஒன்று. நேற்று இந்த படத்தை எங்கள் பல்கலைகழக தியேட்டரில் பார்க்க முடிந்தது. (இந்த குக்கிரமாத்தில் நல்ல படங்கள் ஓடாது என்பதால் வழக்கமான தியேட்டர்களில் வருவதில்லை). போகும் போது அரசியல் சாயம் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. அப்படி எதுவும் இல்லாமல், இரண்டு இளைஞர்கள் தென் அமெரிக்க கண்டம் முழுதும் எப்படி ஊர் சுற்றிப் பார்க்கிறார்கள் என்று சாதரணமாய் துவங்கி, உலகம் பற்றிய அவர்கள் பார்வை எப்படி மெதுவாய் மாறுகிறது என்று அழகாய் முடிகிறது.

அதற்கு மேல் அரசியல் இல்லை. எர்னெஸ்டோ, "ச்சே"வாய் மாற அந்த மோட்டர் சைக்கிள் பயணம் எவ்வாறு உதவியது என்பது மட்டுமே தான் படம். ஒரு தலைவானாய் பிற்காலத்தில் பிரபலமான ஒருவரைப் பற்றி துதி எல்லாம் பாடாமல், அழகாய், அதே சமயம் இயல்பாய் படமாய் எடுக்க முடிந்தது, ஆச்சரியம். தென் அமெரிக்கவின் அழகை கேமரா சுற்றி வர, 120 நிமிடங்கள் படம் நம் கவனத்தை முழுதாய் எடுத்துக் கொள்கிறது. நடித்த நடிகர்கள், இசை, கேமரா என்று ஒவ்வொன்றும் கவனத்தைக் கவர்ந்தது. கட்டாயம் பார்க்க வேண்டிய படம். USல் படம் ஓடவில்லை. "ச்சே"வின் பெயரால் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.